Total Pageviews

Saturday, 30 May 2020

Letter from Our Honourable Prime Minister Sri Narendra Modi - Tamil Translation - மாண்புமிகு பிரதமரின் கடிதம்



Letter from Our Honourable Prime Minister Sri Narendra Modi - Tamil Translation 

https://supportnarendramodibjp.blogspot.com/2020/05/letter-from-our-honourable-prime.html

மாண்புமிகு பிரதமரின் கடிதம்
என் சக இந்தியர்களே,
கடந்த ஆண்டு இதே நாளில் இந்திய வரலாற்றில் பொன்னான ஓர் அத்தியாயம் தொடங்கியது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த நாட்டு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்த அரசுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருந்தனர்.
இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும், நமது தேசத்தின் ஜனநாயக மாண்புகளுக்கும் மீண்டும் ஒரு முறை நான் தலை வணங்குகிறேன்.
சாதாரண நேரமாக இருந்திருந்தால், நான் உங்கள் மத்தியில் வந்திருப்பேன். இருந்தாலும், இப்போதைய சூழ்நிலைகள் அதற்கு அனுமதி தரவில்லை. அதனால் இந்தக் கடிதத்தின் மூலம் உங்களிடம் நான் ஆசி கோருகிறேன்.
உங்களுடைய பாசம், நல்லெண்ணம், தீவிர ஒத்துழைப்பு ஆகியவை புதிய சக்தி மற்றும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. ஜனநாயகத்தின் கூட்டு பலத்தை நீங்கள் வெளிப்படுத்தியுள்ள விதம், ஒட்டுமொத்த உலகிற்கும் வழிகாட்டும் விளக்காக அமைந்திருக்கிறது.
2014 ஆம் ஆண்டில் இந்த நாட்டு மக்கள் வலுவான மாற்றத்துக்காக வாக்களித்திருந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், நிர்வாக அமைப்பு முறை தன்னுடைய லஞ்சமும், தவறான நிர்வாகமும் கொண்ட முறைகளில் இருந்து எப்படி மாறியுள்ளது என்பதை இந்த தேசம் பார்த்துள்ளது. `அந்த்யோதயா' என்ற உணர்வை நிரூபிக்கும் வகையில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
2014 முதல் 2019 வரையிலான காலத்தில் இந்தியாவின் பிரமிப்பான தோற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏழைகளின் கண்ணியம் மேம்பட்டிருக்கிறது. நிதி பங்கெடுப்பு, இலவச எரிவாயு மற்றும் மின் இணைப்புகள், முழுமையான கழிப்பறை வசதி, `அனைவருக்கும் வீடு' திட்டத்தை நோக்கிய பயணம் என சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் மூலம் தன் வல்லமையை இந்தியா நிரூபித்துள்ளது. அதே சமயத்தில், ராணுவத்தில் ஒரே அந்தஸ்திலான பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் (OROP), நாடு முழுக்க ஒரே மாதிரியான வரித் திட்டம் - ஜி.எஸ்.டி., விவசாயிகளுக்கு அதிக அளவிலான குறைந்தபட்சக் கொள்முதல் விலை போன்ற பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக மட்டுமின்றி, இந்தியாவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காகவும் 2019இல் இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியாவை உலக அளவில் முன்னோடி நாடாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த ஓராண்டு காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்தக் கனவை நிறைவேற்றும் பாதையை நோக்கியவையாக உள்ளன.
இன்றைக்கு, நாட்டின் வளர்ச்சிப் பாதையில் தாங்களும் உள்ளடங்கி இருப்பதாக 130 கோடி மக்களும் கருதுகிறார்கள். `ஜன் சக்தி' மற்றும் `ராஷ்ட்ரா சக்தி'யின் வெளிச்சம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒளியூட்டியுள்ளது. `சப்காசாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்' என்ற மந்திரத்தின் மூலமாக அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.
என் சக இந்தியர்களே,
கடந்த ஓராண்டாக பல முடிவுகள் பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளன.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை பலப்படுத்தியுள்ளது. மாண்புக்குரிய உச்சநீதிமன்றம் ஒரு மனதாக அளித்த ராமர் கோவில் தீர்ப்பு, பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. பழமை எண்ணம் கொண்ட முத்தலாக் நடைமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டது. குடிமக்கள் சட்டத்தில் செய்துள்ள திருத்தம், இந்தியாவின் பரிவு மற்றும் பங்கேற்பு நிலை அளிக்கும் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஆனால் தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு உந்துதல் தரக்கூடிய இன்னும் பல முடிவுகளும் இருக்கின்றன.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்பட்டதன் மூலம், ராணுவத்தின் பிரிவுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மிஷன் கங்கன்யானுக்கு ஆயத்தப் பணிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வது நமது உயர் முன்னுரிமையாக இருக்கிறது.
பிரதமரின் கிசான் சம்மான் நிதியில் அனைத்து விவசாயிகளும் சேர்க்கப் பட்டுள்ளனர். ஓராண்டு காலத்திற்குள் 9 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் ரூ.72 ஆயிரம் கோடி செலுத்தப் பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் மூலமாக, கிராமப்புறங்களில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
50 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, இலவசமாகத் தடுப்பூசி போடுவதற்கான பெரிய அளவிலான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறிய கடை வைத்திருப்பவர்கள், அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ளது.
மீனவர்கள் வங்கிக் கடன்கள் பெறுவதுடன், அவர்களுக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப் பட்டுள்ளது. மீன்வளத் துறையை பலப்படுத்த வேறு பல முடிவுகளும் எடுக்கப் பட்டுள்ளன. இவை நீலப் பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிப்பவையாக இருக்கும்.
அதேபோல வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு காண்பதற்காக வியாபாரி கல்யாண் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுடன் இணைந்துள்ள 7 கோடி பெண்களுக்கு அதிக அளவிலான தொகை கடனாக அளிக்கப் படுகிறது. ஜாமீன் எதுவும் இல்லாமல் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து சமீபத்தில் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மலைவாழ் மக்களின் பிள்ளைகளின் கல்வியை மனதில் கொண்டு, 400க்கும் மேற்பட்ட புதிய ஏகலைவா மாடல் இருப்பிடப் பள்ளிகளை உருவாக்கும் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
கடந்த ஆண்டில் மக்களுக்கு உதவிகரமான பல சட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. நாடாளுமன்ற நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில், இப்போது சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமாக இருந்தாலும், சீட்டு நிதிச் சட்டமாக அல்லது பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் அவை விரைந்து நிறைவேற்றப் பட்டுள்ளன.
இந்த அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் காரணமாக, கிராமப்புறப் பகுதிகளுக்கும் - நகர்ப்புறப்பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. முதன்முறையாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேசத்தின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட, இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகள் மற்றும் முடிவுகளின் பட்டியல் இந்தக் கடிதத்தில் எழுத முடியாத அளவுக்கு நீளமானதாக இருக்கும். ஆனால், இந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு நாளும் என்னுடைய அரசு 24 மணி நேரமும் முழு வேகத்துடன் உழைத்து, இந்த முடிவுகளை முன்னெடுத்துச் சென்று அமல்படுத்தியுள்ளது என்பதை நான் கூறியே ஆக வேண்டும்.
என் சக இந்தியர்களே,
நமது நாட்டு மக்களின் நம்பிக்கைகளையும், உயர் லட்சியங்களையும் நிறைவேற்றுவதை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வரும் வேளையில், உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நம் நாட்டையும் பீடித்துள்ளது.
வல்லமை மிகுந்த, பொருளாதார பலம் மிக்க, சுகாதாரத் துறையில் அதிநவீன வசதிகளைக் கொண்ட நாடுகள் ஒருபுறமும், அதிக மக்கள் தொகையும், குறைவான வசதிகளையும் கொண்ட நாடுகள் மறுபுறமும் இதைச் சமாளித்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பரவும் போது, உலகிற்கு ஒரு பிரச்சினையாக இந்தியா மாறும் என்று பலரும் அச்சப்பட்டார்கள். ஆனால் இப்போது, நம்பிக்கை மற்றும் தாங்கிக் கொள்ளும் தன்மை ஆகியவற்றின் காரணமாக, உலகம் நம்மைக் காணும் பார்வையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். உலகின் வல்லமையான, வளமை மிகுந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் கூட்டு பலத்திற்கும், செயல் திறனுக்கும் இணை ஏதும் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். விளக்கு ஏற்றுதல், கை தட்டுதல் தொடங்கி, கொரோனாவை எதிர்த்துப் போராடுபவர்களைப் கௌரவிக்க இந்திய ராணுவத்தினர் நடத்திய நிகழ்ச்சிகள், மக்கள் ஊரடங்கு அல்லது தேசிய அளவிலான முடக்கநிலை காலத்தில் விதிமுறைகளை உறுதியாகக் கடைபிடிப்பது என ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் ஒரே பாரதம் என்பதை வெளிப்படுத்தியிருப்பது தான் ‘ஷ்ரேஷ்டா பாரத்தை’ (உன்னத பாரதம்) எட்டுவதற்கான உத்தரவாதமாக உள்ளது.
இதுபோன்ற பெரிய நெருக்கடியில், யாருக்கும் எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது தான். நமது தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், கைவினைஞர்கள், கைத்தொழில் செய்பவர்கள், சிறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களைப் போன்றவர்களுக்கு எண்ணற்ற துன்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நமது பிரச்சினைகளை அகற்றுவதற்காக, நாம் ஒன்றுபட்டு உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்.
இருந்தபோதிலும், இப்போது நாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் பேரழிவாக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதில் நாம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் ஒவ்வொரு இந்தியரும் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம். நாம் இதுவரையில் பொறுமையைக் கடைபிடித்து வருகிறோம், அது அப்படியே தொடர வேண்டும். இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கும், மற்ற நாடுகளைவிட நல்ல நிலையில் இருப்பதற்கும் இதுதான் காரணம். இது நீண்ட போராட்டம். ஆனால், நாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளோம். வெற்றி என்பது தான் நமது கூட்டு தீர்மானமாக இருக்கிறது.
கடந்த சில தினங்களில், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் சூறாவளி புயல் புரட்டிப் போட்டுள்ளது. இப்போதும் கூட, அந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் தாங்கும் திறமை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அவர்களுடைய மன உறுதி நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
அன்பு நண்பர்களே,
இந்த சமயத்தில், இந்தியா உள்ளிட்ட, பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் எப்படி மீட்சி பெறும் என்ற விவாதம் பரவலாக நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தனது ஒற்றுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தி உலகிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதைப் போல, பொருளாதார மீட்டுருவாக்கத்திலும் நாம் முன்னுதாரணத்தை ஏற்படுத்துவோம் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கிறது. பொருளாதார விஷயத்தைப் பொருத்த வரையில், 130 கோடி இந்தியர்களும் தங்களுடைய பலத்தின் மூலம், உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதுடன், உத்வேகம் அளிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
நாம் தற்சார்பாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. நமது சொந்தத் திறன்களின் அடிப்படையில், நமது பாதையில் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதைச் செய்வதற்கு தற்சார்பு இந்தியா என்ற ஒரே வழிதான் இருக்கிறது.
தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக சமீபத்தில் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களின் தொகுப்பு, இந்த இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கியமான நடவடிக்கை ஆகும்.
இந்த முன்முயற்சி ஒவ்வொரு இந்தியருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் புதிய காலக்கட்டத்தை உருவாக்கும். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்த இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகளைத் தரும் காலகட்டமாக இருக்கும்.
வியர்வை, கடின உழைப்பு, நமது தொழிலாளர்களின் திறமையுடன் கூடிய இந்திய மண், இறக்குமதிகளை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் வகையிலான உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து, தற்சார்பை நோக்கி பயணம் செய்வதாக இருக்கும்.
அன்பு நண்பர்களே,
கடந்த ஆறு ஆண்டு கால பயணத்தில், என் மீது நீங்கள் அன்பு காட்டி, ஆசிகள் வழங்கி வருகிறீர்கள்.
உங்கள் ஆசிகளால் கிடைத்த பலத்தால் தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்து, கடந்த ஓராண்டு காலத்தில் வேகமாக முன்னேறிச் செல்ல முடிந்துள்ளது. இருந்தபோதிலும், இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. நமது நாடு எதிர்கொண்டுள்ள பல சவால்களும், பிரச்சினைகளும் உள்ளன. நான் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். என்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுக்கு எந்தக் குறையும் இருக்காது. எனவே, என் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையைவிட, உங்களை, உங்கள் பலத்தை, உங்கள் திறன்களை நான் அதிகமாக நம்பி இருக்கிறேன்.
என்னுடைய உறுதியான நிலைப்பாடுகளுக்கு நீங்களும், உங்கள் ஆதரவும், ஆசிகளும், பாசமும் தான் பலமாக இருக்கின்றன.
உலக அளவில் நோய்த் தொற்று பரவும் இது நிச்சயமாக ஒரு நெருக்கடியான காலக்கட்டம் தான். ஆனால் இந்தியர்களான நமக்கு இதுவும் கூட உறுதியான முடிவுக்கான காலமாக அமைந்துள்ளது.
130 கோடி மக்களின் தற்போதைய நிலையும், எதிர்காலமும் எதிர்மறை விஷயங்களால் ஒருபோதும் பாதிக்கப்பட்டு விடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நமது தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தை நாமே முடிவு செய்வோம்.
முன்னேற்றத்தின் பாதையில் நாம் முன்னேறிச் செல்வோம், வெற்றி நமதாக இருக்கும்.
कृतम्मेदक्षिणेहस्ते, जयोमेसव्यआहितः என்று சொல்லப்படுகிறது.
ஒருபுறம் நாம் கடமை மற்றும் செயல்பாட்டில் ஈடுபாடு காட்டினால், மறுபுறம் நமக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும் என்பது இதன் அர்த்தம்.
.
நாட்டின் வெற்றிக்கான பிரார்த்தனைகளுடன், நான் மீண்டும் ஒரு முறை உங்களிடம் தலை வணங்குகிறேன்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்!!!
விழிப்பாக இருங்கள், விஷயங்களை அறிந்தவர்களாக இருங்கள்!!!
உங்களின் பிரதான சேவகன்
நரேந்திர மோடி
Jai Hind...

No comments:

Post a Comment

Suggestion for India Government to earn Rs. One Crore Crore. Rs.10,00,00,00,00,00,000/- Suggestion to create Indian Government Rupee Crypto Currency.

Dear Sri Our Honourable Prime Minister Sri Narendra Modi Ji, Namasthe. I am Financial Scientist. Suggestion for India Government t...